
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள சக்ராதர்பூர் பகுதியில் இன்று (ஜூலை 30) அதிகாலை 3.45 மணி அளவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் இரு பயணிகள் மரணமடைந்துள்ளனர், ஆறு பயணிகள் காயமடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கிளம்பி மஹாராஷ்டிர மாநிலம் மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையம் வரை செல்லும் 12810 ஹவுரா - சிஎஸ்எம்டி பயணிகள் ரயில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் சக்ராதர்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சரக்கு ரயில் ஒன்று திடீரெனத் தடம் புரண்டு பயணிகள் ரயில் மீது மோதியது.
இதனால் ஹவுரா - சிஎஸ்எம்டி பயணிகள் ரயிலும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு விபத்து நடந்த இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, சக்ராதர்பூருக்கு சிகிச்சைக்காகக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரயில் விபத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் செல்லும் ஐந்து ரயில்கள் இது வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
`ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்து நடைபெறுவதும், அதனால் ஏற்படும் மரணங்களும், காயங்களும் முடிவில்லாமல் தொடர்கின்றன. இதை எத்தனை காலம்தான் பொறுத்துக் கொள்வது?’ என்று இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் மேற்கு வங்க முதல் மமதா பானர்ஜி.