10 வருடங்களுக்கு முன் ஆதார் அடையாள எண்ணைப் பெற்றவர்கள், வரும் செப்டம்பர் 14-க்குள் ஆதார் தொடர்பான தகவல்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருகிறது.
ஆதார் அடையாள எண்ணை 10 வருடங்களுக்கு முன் பெற்றவர்கள் அதைச் சமீபத்தியத் தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஆதார் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள அமைப்பு.
செப்டம்பர் 14-க்குள் ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் எனவும், செப்டம்பர் 15 முதல் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி நபர்கள் தங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவில்லை என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் சேவை மையங்களில் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்கலாம், அல்லது myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் ஆதாரைப் புதுப்பிக்கலாம்.
இணையதளம் வழியாக ஆதாரைப் புதுப்பிக்கும் வழிமுறைகள் பின்வருமாறு:
ஆதார் இணையதளத்தில், ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு வரும் OTP-ஐ உபயோகித்து நுழைய வேண்டும்.
ஆவண புதுப்பிப்பு (Document Updation) என்ற பொத்தானை அழுத்தவும். அதில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். அவற்றை மாற்ற விரும்பும் பட்சத்தில் புதிய தகவல்களைப் பதிய வேண்டும்.
பிறகு புதிதாகப் பதியப்பட்ட அல்லது ஏற்கனவே உள்ள பழைய டெமோகிராபிக் தகவல்கள் அனைத்தையும் சரிபார்க்கவும். இதைத் தொடர்ந்து `மேலே உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நான் உறுதிகொள்கிறேன்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதைத் தொடர்ந்து தாக்கல் செய்ய விரும்பும் அடையாள, முகவரிச் சான்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் 2MB அளவுக்கு உட்பட்ட JPEG, PNG, PDF ஆகிய வடிவில் இருக்க வேண்டும்.
இறுதியில் அனைத்து விவரங்களையும் சரிபார்த்துவிட்டு இணையதளத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். இதைத் தொடர்ந்து ஆதார் புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டது என்பதற்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.