தமிழக அமைச்சர்கள் எத்தனை பேர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என இன்று (செப்.30) செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கு மீதான விசாரணையின்போது கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.
அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்.26-ல் நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து நேற்று (செப்.29) தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி மீதான லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பான விசாரணையை ஒரு வருட காலத்துக்குள் முடிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒய். பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இன்று (செப்.30) உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, அரசு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்ற அமர்வு. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்கு விசாரணையை விரைவாகக் கொண்டு செல்லவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தற்போது உள்ள தமிழக அமைச்சர்களில் எத்தனை பேர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்ற விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அக்டோபர் மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.