
டானா புயலுக்கு இரு புறங்களிலும் இருந்த எதிர் புயல்கள் மற்றும் அலையாத்தி காடுகளால், புயலின் தீவிரத்தன்மையின் குறைந்ததாக இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்.22-ல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், பின் டானா புயலாக வலுப்பெற்று நேற்று (அக்.25) காலை ஒடிஷா மாநிலத்தில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இருந்தும், எதிர்பார்த்ததைவிட டானா புயலின் தாக்கம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய நேரத்தில், அதை சுற்றி இரு புறங்களிலும் எதிர் புயல்கள் இருந்துள்ளன. வானத்தில் இருந்து நிலத்தை நோக்கி அதிக அழுத்தத்தில் காற்று வீசுவதே எதிர் புயலின் தன்மையாகும். கரையைக் கடக்கும்போது டானா புயலின் இரு புறங்களிலும் இருந்த இந்த எதிர் புயல்களால், அதன் வீரியம் குறைந்து அதனால் பாதிப்பும் குறைந்துள்ளது.
மேலும் பித்தர்கனிகா தேசிய பூங்காவில் உள்ள அலையாத்தி காடுகளும் புயலின் பாதிப்பை பெருமளவு குறைத்துள்ளன. கேந்திரபாரா பகுதியில் கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த 209 சதுர கி.மீ. அளவிலான அலையாத்தி காடுகளால், புயல் கரையைக் கடந்த இடத்தில் சேதாரங்கள் குறைவாக இருந்துள்ளன.
இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி உமா சங்கர் தாஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தவை பினவருமாறு,
`எதிர் புயல்கள் இல்லாமல் போயிருந்தால், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கனமழை பெய்து அதனால் ஒடிஷாவின் மத்திய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். எதிர் புயல்கள் டானா புயலின் வீரியத்தைக் குறைத்துள்ளன, இதனால் வட மாவட்டங்களில் மட்டுமே கனமழை பெய்தது’ என்றார்.