
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்ட நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த ஜூன் 13-ல் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஏவுகணைகள், டிரோன்களை உபயோகித்து பரஸ்பர வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் மிகப்பெரிய அளவிலான பிராந்திய மோதலாக விரிவடையும் வரை, இந்த மோதலால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அடுத்தடுத்து மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மத்திய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், உலகளாவிய வகையில் கச்சா எண்ணெயின் விலை, எல்லை தாண்டிய முதலீடுகள், கப்பல் போக்குவரத்து செலவுகள் போன்றவற்றின் மீது குறுகிய காலத்திலேயே இந்த தாக்குதலின் தாக்கம் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு வேளை, இஸ்ரேல்-ஈரான் மோதல் ஒரு முழுமையான போராக விரிவடைந்து, ஹௌத்திகள் போன்ற கிளர்ச்சியார்கள் குழுக்களும் இதில் இணையும் பட்சத்தில், அது இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகத்தின் மீது பல்வேறு வழிகளிலும் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தால் இந்தியா பாதிப்படையும்.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையே ஒரு முழுமையான போர் ஏற்பட்டு மத்திய கிழக்கில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்படும் பட்சத்தில், ஒரு நாளைக்கு 50 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களின் போக்குவரத்து தடைபடும்.
இஸ்ரேல் மேற்கொண்ட முதற்கட்ட தாக்குதலால் கடந்த வெள்ளி (ஜூன் 13) அன்று 13% அளவிற்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ஏற்றும் கண்டது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதிகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் மூலம் இறக்குமதி மற்றும் எரிபொருள்/உர மானியங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், அது கடுமையான நிதி நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தும்.
இதனால் சமூக நலம் சார்ந்த அரசு செலவினங்களுக்கு நிதி குறைப்பு செய்யப்படும் அபாயம் ஏற்படும். அத்துடன் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து, அதன் மூலம் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கும்.
ஒரு கட்டத்தில் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை தவிர்க்க முடியாத நிலை உருவாகக்கூடும். இத்தகைய தாக்கம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மீது எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
நைட்ரஜன் சார்ந்த உரங்கள், குறிப்பாக யூரியா மற்றும் அமோனியா ஆகியவற்றின் உற்பத்தி, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை சார்ந்து உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விலையை உயர்த்தும். இதனால் இயல்பாகவே உரங்களுக்கான உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும்.
மேலும் இதன் மூலம் சில்லறை விற்பனையில் உரங்களின் விலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கான மானிய செலவு அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும்.
ஈரான், இஸ்ரேல் என இரு நாடுகளுடனும் இந்தியா வர்த்தக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், 1.24 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஈரானுக்கும், 2.15 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இஸ்ரேலுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்தது. முழு அளவிலான போரால் இந்த ஏற்றுமதிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.