ஏர் இந்தியா விபத்து: இங்கிலாந்து குடும்பத்தினரிடம் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாற்றி ஒப்படைப்பு! | Air India
ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவறான உடல்கள் கிடைக்கப்பெற்றதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அஹமதாபாத்தில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர், சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளில் உடல்கள் அனுப்பப்பட்டதாகவும், இந்த குழப்பத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
`விபத்தில் பலியானவர்களின் எச்சங்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. லண்டனில் இருக்கும் விசாரணை அதிகாரி இறந்தவர்களின் டிஎன்ஏவுடன் அவர்களின் எச்சங்களுடன் பொருத்தி சரிபார்க்க முயன்றபோது இந்த குழப்பம் வெளிப்பட்டது’ என்று இங்கிலாந்து வாழ் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டனை சேர்ந்த கீஸ்டோன் லா சட்ட அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் இந்தியா டுடே ஊடகத்திடம் கூறியுள்ளார்.
மேலும், `சவப்பெட்டியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் மட்டுமே இருந்தது, அது அவர்களது குடும்ப உறுப்பினரின் உடல் அல்ல என்று விசாரணை அதிகாரி கூறியதை அடுத்து, இறுதிச் சடங்கு திட்டங்களை அந்த குடும்பம் கைவிட வேண்டியிருந்தது’ என்று வழக்கறிஞர் கூறினார்.
மற்றொரு குடும்பம் தங்கள் குடும்ப உறுப்பினரின் உடலை, மற்றொரு பயணியின் உடலுடன் சேர்த்துப் பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் ஒரே சவப்பெட்டியில் வைக்கப்பட்டதாக அந்த வழக்கறிஞர் கூறினார்.
`குடும்ப உறுப்பினரின் இறுதி சடங்கை மேற்கொள்வதற்கு முன்பு, இரண்டு பயணிகளின் உடல்களையும் அந்த குடும்பம் பிரிக்க வேண்டியிருந்தது’ என்று இந்தியா டுடேவிடம் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.