
பிஹாரில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சிவான் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆகவும் சரண் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உள்ளது. நேற்றைய நிலவரப்படி சிவான் மாவட்டத்தில் 20 பேரும் சரண் மாவட்டத்தில் 5 பேரும் உயிரிழந்திருந்தார்கள்.
இதுதவிர கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். இவர்களும் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று மாலை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், "பூரண மதுவிலக்கு முழுமையாக அமலில் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மக்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்றார் முதல்வர் நிதிஷ் குமார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிவான் காவல் துறையினர் 10 பேரையும் சரண் காவல் துறையினர் 37 பேரையும் கைது செய்துள்ளார்கள்.