1947 இந்திய பிரிவினைக்குப் பிறகு, ஜும்மு காஷ்மீரில் அகதிகளாக அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், நாளை (செப்.24) நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர்.
கடந்த 1947-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து, இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றன. இதைத் தொடர்ந்து அப்போது இந்தியாவுக்கு உட்பட்ட காஷ்மீரின் அங்கமாக இருந்த மிர்பூர், முஸாஃபராபாத், பூஞ்ச் பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இந்தப் பகுதிகள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பு (ஆஸாத்) காஷ்மீர் என்று அழைக்கப்படுகின்றன.
இதனை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 1947-ல் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அகதிகளாகத் தஞ்சமடைந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு அமலில் இருந்த காரணத்தால் இந்தக் குடும்பங்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
2019-ல் இந்திய நாடாளுமன்றத்தால் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 70 வருட காலமாக அகதிகளாக இருந்துவந்த இந்தக் குடும்பங்களுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்பட்டு, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டன.
வாக்குரிமை பெற்ற இந்த மக்கள் கத்துவா மற்றும் ஆர்.எஸ். புரா – ஜம்மு தெற்கு தொகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இவர்கள் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.