அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாடு நிறுவனங்களில் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் முதலீடு செய்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (ஆகஸ்ட் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, செபி தலைவர் மாதபி புச்சும் அவரது கணவர் தவால் புச்சும் கூட்டாக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
`கடந்த ஆகஸ்ட் 10-ல் எங்கள் மீது குற்றம்சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரப்பூர்வமற்றது. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. எங்கள் வாழ்க்கையும், நிதி பரிவர்த்தனைகளும் திறந்த புத்தகம் போன்றவை.
எங்கள் பரிவர்த்தனைகள் தொடர்பாக தேவைப்பட்ட அனைத்தையும் கடந்த காலகட்டங்களில் செபியிடம் வழங்கியிருக்கிறோம். நாங்கள் தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலத்தில் இருந்து எங்களுடைய நிதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எந்த ஒரு அரசு அமைப்புக்கும் அளிப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
வெளிப்படைத்தன்மை கருதி, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம். முன்பு செபி அமலாக்க நடவடிக்கை எடுத்து அதை ஒட்டி நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இது தொடர்பாக தற்போது எங்கள் மீது தனிநபர் தாக்குதலில் இறங்கியிருக்கிறது’.