
அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களால் (Foreigner Tribunals) வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்ட நபர்களை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சர்வதேச எல்லையைத் தாண்டி வங்கதேசத்திற்குள் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா இன்று (மே 31) உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களால் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்ட நபர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையைத் தொடங்காமல் அவர்களை மாடியா முகாமில் தங்க வைத்துள்ளதை சுட்டிக்காட்டி கடந்த பிப்ரவரி 4-ல், அஸ்ஸாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் முயற்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியதாவது,
`உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக உங்களுக்குத் தெரியும், வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டவர்களை எந்த வழியிலாவது (அவர்களின் சொந்த நாட்டிற்கு) திருப்பி அனுப்பவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்ட, ஆனால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாதவர்களை நாங்கள் திருப்பி அனுப்புகிறோம். அவர்களில் சிலர் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எங்களிடம் கூறினால், நாங்கள் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை’ என்றார்.
மேலும், சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்ப வங்கதேச அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசாங்கத்தின் உத்தியின் ஒரு பகுதியாக, அஸ்ஸாமில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஆவணமற்ற குடியேறிகளை கிழக்கு எல்லைப்பகுதி வழியாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.