
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான முடா நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.
அரசாங்க வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்றாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 மனைகளை ஒதுக்கியது மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பு (முடா). இதில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் சினேஹமாயி கிருஷ்ணா என்பவர் கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து புகாரளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் நில முறைகேடு வழக்கைப் பதிவு செய்தார்கள். இந்நிலையில், முடா நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சினேஹமாயி கிருஷ்ணா.
மனுவின் மீதான விசாரணையை கடந்த மாதம் நிறைவு செய்த உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், சினேஹமாயி கிருஷ்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக இன்று (பிப்.7) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் சித்தராமையா. அதேநேரம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார் சமூக ஆர்வலர் சினேஹமாயி கிருஷ்ணா.
முடா நில முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவுசெய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வழங்கப்பட்ட சம்மனுக்குக் கடந்த மாதம் இடைக்காலத் தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.