கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்: சயிஃப் அலி கானுக்குப் பின்னடைவா?

ஹமீதுல்லா கானுக்குச் சொந்தமாக மத்திய பிரதேசத்தில் உள்ள ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்தும் என கடந்த 2014-ல் அறிவிக்கப்பட்டது.
சயிஃப் அலி கான் - கோப்புப்படம்
சயிஃப் அலி கான் - கோப்புப்படம்ANI
1 min read

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மூதாதையர்களுக்குச் சொந்தமான ரூ. 15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, 'எதிரி சொத்து' என்று வகைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நடிகர் சைஃப் அலி கானின் மனுவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சைஃப் அலி கான், அவரது சகோதரிகள் சோஹா மற்றும் சபா மற்றும் அவர்களின் தாய் ஷர்மிளா தாகூர் ஆகியோரை ரூ. 15,000 கோடி மதிப்புடைய அந்த சொத்துக்களின் வாரிசுகளாக அங்கீகரித்து கடந்த 2000ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், வாரிசுரிமை தொடர்புடைய இந்த பூர்வீக சொத்து தகராறு குறித்து மீண்டும் விசாரணை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு ஒரு வருட கால அவகாசத்தை நிர்ணயித்துள்ளது.

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகராக இருக்கும் போபால், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலத்தில் தனி சமஸ்தானமாக இருந்தது. இந்திய சுதந்திரத்தின்போது இதன் நவாபாக ஹமீதுல்லா கான் இருந்தார். பிரிட்டிஷ் காலனி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவாகின, அதோடு சமஸ்தானங்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஹமீதுல்லா கானின் மூத்த மகளான அபிதா சுல்தான் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். ஹமீதுல்லா கானின் 2-வது மகளான சஜிதா சுல்தான், (ஹரியாணா) பட்டோடி நவாப் இஃப்திகாரி அலி பட்டோடியை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியரின் மகனான மன்சூர் அலி கான் பட்டோடியின் மகனாவார், பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் பட்டோடி.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இங்கிருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்கும் வகையில், `எதிரி சொத்து சட்டத்தை’ அன்றைய மத்திய அரசு இயற்றியது.

இதன் அடிப்படையில் (ஹமீதுல்லா கானின் மகள் பாகிஸ்தானுக்குச் சென்றதால்), ஹமீதுல்லா கானுக்குச் சொந்தமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்தும் என கடந்த 2014-ல் அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, கடந்த 2015-ல் சயிஃப் அலிகான் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், சொத்துகளை கையகப்படுத்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்காலத் தடையை விலக்கிக்கொள்வதாக கடந்த டிச.13-ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் சயிஃப் அலிகான் குடும்பத்தினர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பூர்வீக சொத்துகள் தொடர்புடைய இந்த விவகாரத்தில் ஒரு வருட காலத்திற்குள் மீண்டும் விசாரணை நடத்தி முடிக்க (கீழ்) விசாரணை நீதிமன்றத்திற்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in