
பாரதம் ஒருங்கிணைந்த நாடு என்பதை ஏற்க மறுக்கும் கட்டமைப்பு தமிழ்நாட்டில் இருப்பதாகவும், வடக்கு - தெற்கு என்று நாட்டை பிரித்து வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143-வது பிறந்தநாளை ஒட்டி, கடந்தாண்டு டிச. 11 அன்று, `காலவரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற பெயரிலான சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளின் 23 தொகுதிகளை தலைநகர் தில்லியில் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த 23 தொகுதிகளையும், சீனி விசுவநாதன் என்பவர் தொகுத்திருந்தார். இவரது இந்தப் பணிக்காக அண்மையில் பத்மஸ்ரீ விருது அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் சீனி விசுவநாதனுக்கு சென்னை மயிலாப்பூரில் இன்று (பிப்.18) பாராட்டு விழா நடைபெற்றது.
பாரத் விகாஸ் பரிஷத், வானவில் பண்பாட்டு மையம், திருவொற்றியூர் பாரதி பாசறை ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்த பாராட்டு விழாவில் முதன்மை விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது,
`நமது மாநில பல்கலைக்கழகங்களில் ஒரு பாரதியார் இருக்கை கூட இல்லை என்பதை அறிந்து ஏமாற்றமடைந்தேன். கடந்த 3.5 வருடங்களுங்களாக தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாரதியார் இருக்கை அமைக்க நான் மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.
துணைவேந்தர்கள் அதற்கு ஆதரவாக இருந்தாலும், அவர்கள் அதீதமான அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பாரதம் ஒருங்கிணைந்த நாடு என்பதை ஏற்க மறுக்கும் கட்டமைப்பு இங்கே இருக்கிறது. காஞ்சி - காசி இடையே இருக்கும் ஒற்றுமையை பாரதியார் பேசினார்.
ஆனால், வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள். பாரதியார் வேதங்களை போற்றினார், இங்கு வேதங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். இம்மாநிலம் முழுவதும் முழுவதும் சுற்றி இருக்கிறேன். மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை.
60 ஆண்டுகளாக தமிழ் தமிழ் என்று பேசுகிறார்களே தவிர, தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையும் செய்யவில்லை’ என்றார்.