
ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த சோரன்.
ஜார்க்கண்ட் முதல்வராக 4-வது முறையாக இன்று (நவ.28) பொறுப்பேற்றுக் கொண்டார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன். தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ஹேமந்த சோரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார்.
ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் வரை பதவியில் இருக்கலாம் என்ற நிலையில், ஹேமந்த் சோரன் மட்டுமே பதவியேற்றுள்ளார். அமைச்சரவை தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு, மாநில அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், சி.பி.ஐ. (எம்.எல்)(எல்) 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.