
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பாக மக்களவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ளார் பாஜக எம்.பி. ஹேமமாலினி.
கடந்த ஜன.29 தை (மவுனி) அமாவாசை நாளன்று, பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் புனித நீராடும் வகையில், அங்கிருந்த திரிவேணி சங்கமம் பகுதியில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உ.பி. காவல்துறை தகவல் தெரிவித்தது.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த ஜன.31-ல் நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (ஜன.4) மக்களவையில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பேசிய பிரபல நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, `தவறாகப் பேசுவதே அகிலேஷின் வேலையாகிவிட்டது. அவரும் கும்பமேளாவிற்குச் சென்றிருந்தார். தள்ளுமுள்ளு சம்பவம் நடைபெற்றது உண்மை, ஆனால் அது அவ்வளவு பெரிதாக இல்லை. அந்த சம்பவம் மிகைப்படுத்தப்படுகிறது.
உத்தர பிரதேச அரசு கும்பமேளா நிகழ்வை நல்ல முறையில் கையாண்டது, அனைத்துமே நன்றாக நடைபெற்றது. வருகை தரும் மக்கள் கூட்டத்தை கையாள்வது கடினமான செயலாக உள்ளது. ஆனால் எங்களால் (பாஜக அரசு) முடிந்தவற்றை சிறப்பாக செய்துவருகிறோம்’ என்றார்.