பிஹாரில் தனிஷ்க் நகைக் கடையில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம் ஆரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோபாலி சௌக் பகுதியில் தனிஷ்க் நகைக் கடை அமைந்துள்ளது. இந்த நகைக்கடையில் தான் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் முதலில் நுழைவாயிலில் பாதுகாவலரைத் தாக்கி, அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்துள்ளார்கள். இதன்பிறகே, கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள்.
கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்ததும், நகைக் கடைக்காரர்கள் மற்றும் கடையிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, விற்பனையாளரைத் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் அனைவரும் தப்பித்துள்ளார்கள்.
நகைக் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் கூறுகையில், "8-9 பேர் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் இருந்தார்கள். நாங்கள் காவல் துறையினரைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் நகைக் கடைக்குள் தான் இருந்தார்கள். காவல் துறையினர் நேரத்துக்கு வந்திருந்தால், கொள்ளையர்கள் பிடிபட்டிருப்பார்கள். நகைக் கடைக்கு வந்துகொண்டிருப்பதாகக் கூறி வந்த அவர்கள், வந்து சேர்வதற்குள் கொள்ளையர்கள் தப்பித்துவிட்டார்கள்" என்றார்.
நகைக் கடை பாதுகாவலர் மனோஜ் குமார் கூறுகையில், "நகைக் கடை காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது. 6 குற்றவாளிகள் காரில் வந்தார்கள். சாலையின் எதிரே காரை நிறுத்தினார்கள். நகைக் கடை கொள்கைப்படி, ஒரே நேரத்தில் 4 பேர் இணைந்து நுழைவதை அனுமதிக்க மாட்டோம். எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பேர் என்கிற வீதத்தில் அவர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். ஆறாவதாக வந்த நபர், என் தலையில் துப்பாக்கியை வைத்து, என்னிடம் இருந்த ஆயுதத்தைப் பறித்து என்னைத் தாக்கினார். நகைகளைக் கொண்டு பைகளை நிரப்பினார்கள்" என்றார் அவர்.
தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்துக்குரிய இரு நபர்கள் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.