
கடந்தாண்டு கேரள மாநிலம் வயநாட்டின் முண்டகை-சூரல்மலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த பகுதியில் கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் மூலம் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக உள்ளூர்வாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சூரல்மலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பெய்லி பாலம் அருகே சேற்று நீர் ஆற்றின் கரைகளை உடைத்துள்ளதாகவும், மாவட்ட அதிகாரிகள் இன்று (ஜூன் 25) தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதுப்பித்தல் பணிகளுக்காக ஆற்றங்கரையின் இருபுறமும் சேமித்து வைக்கப்பட்டிருந்த மண் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அட்டமலா சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் உள்புகுந்ததாக கூறப்படுகிறது.
வனப்பகுதிக்கு உள்பட்ட புஞ்சிரிமட்டம் அருகே உள்ள மலைப்பகுதியில், புதிதாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இருப்பினும், அது தொடர்பாக இதுவரை எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கடந்தாண்டு ஜூலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய பேரழிவை நினைத்து உள்ளூர் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.
கடந்த சில நாள்களாக வயநாடு மலைப்பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், இதனால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை எனவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெவிக்கின்றனர்.
தொடர் மழையால் மனந்தவாடி மற்றும் பனமரம் பகுதிகளில் கபினி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வயநாடு உள்பட 11 கேரள மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.