
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாலும், பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளதாலும், இதுவரை இல்லாத அளவிற்கு ஏ.சி.க்கள், கூலர்கள் மற்றும் மின் விசிறிகளுக்கான தேவை அங்கு அதிகரித்துள்ளது.
வரலாற்று ரீதியாக மிதமான கோடைகாலத்திற்கு பெயர் பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா மற்றும் குல்காம் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் ஏ.சி.க்களை வாங்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
`ஜூலை மாதத்தில் இதுபோன்ற ஒரு விஷயம் கேள்விப்படாதது’ என்று அனந்த்நாக்கில் உள்ள ஒரு கடைக்காரர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஏசி விற்பனை 60% அதிகரித்துள்ளதாக, உள்ளூரில் எலெக்ட்ரானிக் பொருள்கள் கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர் இந்தியா டுடேவிடம் தெரிவித்துள்ளார்.
பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் வெப்பநிலை, பல குடும்பங்களை - குறிப்பாக வயதான உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களை - குளிரூட்டும் சாதனங்களில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, பாரம்பரிய மின்விசிறிகளைவிட ஏ.சி.க்களை மக்கள் அதிகளவில் தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதனால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிரூட்டும் சாதனங்களைச் சார்ந்திருப்பது வளிமண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் குளோரோஃப்ளூரோகார்பன்களின் (CFCs) வெளியேற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது என்று கிலாம் அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் சுற்றுச்சூழல் புவியியலாளர் மசூன் ஏ. பெய்க் கூறியுள்ளார்.