
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடைபெற்றது.
நாடு முழுவதிலும் வக்ஃபு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு எழுப்பியதைத் தொடர்ந்து, சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவின் அறிக்கை கடந்த பிப்ரவரியில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
கூட்டுக்குழு அறிக்கையின் அடிப்படையில், புதிய வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று (ஏப்ரல் 2) தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,
`நேர்மறையான திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தும்போது எதற்காக எங்களிடம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன? இந்த மசோதாவுடன் சம்மந்தம் இல்லாதவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். நாங்கள் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாடாளுமன்ற கட்டடம் கூட வக்ஃபு சொத்தாக உரிமை கோரப்பட்டிருக்கும்’ என்றார்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் (காங்கிரஸ்),
`இந்த சட்ட திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த மசோதா மூலம் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனமாக்கவும், இந்திய சமூகத்தைப் பிரித்தாளவும் அரசு முயற்சி செய்கிறது. அண்மையில் இரட்டை எஞ்சின் அரசு சாலையில் தொழுகை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதிகூட அளிக்கவில்லை’ என்றார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,
`இந்த மசோதா யாருக்காக கொண்டுவரப்படுகிறதோ அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதைவிட பெரிய அநீதி என்ன இருக்க முடியும்? பாஜக நிலத்தை மிகவும் நேசிக்கும் கட்சி. ரயில்வே நிலத்தையும், பாதுகாப்புத்துறை நிலத்தையும் அவர்கள் விற்றார்கள். இனி வக்ஃபு நிலங்களையும் அவர்கள் விற்பனை செய்வார்கள்’ என்றார்.