இதுவே முதல்முறை: சிகரெட்டுகளைப்போல சமோசாக்கள், ஜிலேபிகளுக்கு எச்சரிக்கை!

உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்பு போன்றவை இந்திய மக்களிடையே அதிகரித்து வருகின்றன.
சமோசாக்கள் - கோப்புப்படம்
சமோசாக்கள் - கோப்புப்படம்ANI
1 min read

ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சமோசாக்கள், ஜிலேபிகள், பக்கோடாக்கள், வடா பாவ் போன்ற பிரபலமான இந்திய உணவுப் பண்டங்கள் உடல்நலத்திற்கு விளைவிக்கும் தீங்கு குறித்து, சிகரெட் பாணியில் விரைவில் எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளன.

இத்தகைய உணவுகளில் அதிகளவு எண்ணெய், சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து இருப்பது எச்சரிக்கை வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேசிய அளவில் செயல்படுத்தப்படவுள்ள இந்த பிரச்சாரம் முதலில் மஹாராஷ்டிரத்தில் தொடங்கவுள்ளது.

நாக்பூர் எய்ம்ஸ் வளாகம் இந்த முயற்சிக்கான முன்னோடி இடமாக செயல்படவுள்ளது. எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் அமைக்கப்படவுள்ள பிரகாசமான, படிக்க எளிதான பலகைகளில் எச்சரிக்கை வாசகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

எதனால் இத்தகைய நடவடிக்கை?

இதுவரை இல்லாத அளவிலான சுகாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்கிறது. இந்திய மக்களிடையே உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்பு போன்றவை அதிகரித்து வருவதால், மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

எண்ணெயில் பொறித்த மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வதால், பல்வேறு உடல்ரீதியிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சரியாக 25 ஆண்டுகள் கழித்து, அதாவது 2050 வாக்கில் 4.4 கோடி எண்ணிக்கையிலான இந்திய மக்கள் அதிக எடையுடன் அல்லது பருமனான உடலுடன் இருக்க வாய்ப்புள்ளதாக, தி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டுமே

அதேநேரம் சமோசாக்கள், ஜிலேபிகள் போன்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும், இத்தகைய நடவடிக்கை பாரம்பரிய உணவுகள் மீதான தடை அல்ல என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால் அவர்கள் உண்ணும் உணவின் விளைவுகள் குறித்து நுகர்வோருக்குத் தெரியப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in