மருத்துவப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம்

சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை குறித்து முதற்கட்ட அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
மருத்துவப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம்
1 min read

`மருத்துவப் பணியாளர்கள் தங்களின் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் பணிக்குத் திரும்பியவுடன் அவர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்’ என்று கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கை இன்று (ஆகஸ்ட் 22) காலை விசாரிக்கத் தொடங்கியுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8-ல் இறந்து கிடந்தார். முதற்கட்ட உடற்கூராய்வுக்குப் பிறகு அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து இந்த படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம். பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த படுகொலை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கடந்த ஆகஸ்ட் 22-ல் நடந்த விசாரணையில், வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பணியில் இருக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை பரிந்துரைக்க தேசிய அளவிலான 10 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாகவும் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் இன்று மீண்டும் நடந்து வரும் விசாரணையில், `மருத்துவப் பணியாளர்கள் தங்களின் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் பணிக்குத் திரும்பியவுடன் அவர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். மருத்துவர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் பொது சுகாதாரக் கட்டமைப்பு எப்படி வேலை செய்யும்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

மேலும், சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை குறித்து முதற்கட்ட அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in