குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள்: மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்
ANI

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள்: மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களைப் பெரும்பாலும் குரங்கு அம்மை தாக்குகிறது. ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு ஏற்படுவதால் குரங்கு அம்மை பரவும்
Published on

தில்லியில் உள்ள ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக நேற்று (செப்.08) அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, குரங்கு அம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

13 ஆப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக வேகமாகப் பரவியதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 14-ல் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த உலகளாவிய சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது உலக சுகாதார மையம்.

இதை அடுத்து ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நபர்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது மத்திய அரசு. நேற்று (செப்.09) குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவர் தனிமைப்பட்டார்.

இந்நிலையில் குரங்கு அம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகள் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், `குரங்கு அம்மை பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அறிகுறியாக தோலில் அரிப்பு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படும். 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களைப் பெரும்பாலும் குரங்கு அம்மை தாக்குகிறது. ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு ஏற்படுவதால் குரங்கு அம்மை பரவும்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கு அம்மை எளிதாகத் தாக்குகிறது. ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டம் மூலம் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரங்கு அம்மை பரிசோதனைக்கு ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’, என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in