
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் `ஆரோக்கியமற்ற உணவுகள்’ என சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் வகைப்படுத்தப்பட இருப்பதாக வெளியான செய்திக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சமோசாக்கள், ஜிலேபிகள், பக்கோடாக்கள் போன்ற பிரபலமான இந்திய உணவுப் பண்டங்கள் உடல்நலத்திற்கு விளைவிக்கும் தீங்கு குறித்து, சிகரெட் பாணியில் விரைவில் எச்சரிக்கை விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த ஒரு சில நாள்களாக செய்திகள் பரவின.
இத்தகைய உணவுகளில் அதிகப்படியான எண்ணெய், சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து இருப்பது எச்சரிக்கை வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த செய்திக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக அகில இந்திய வானொலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`சமோசா, ஜிலேபி, லட்டு போன்ற உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை லேபிள்களை பதிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகளை சுகாதார அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்த ஊடகச் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று ஒரு அறிக்கை மூலம் சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
பணியிடங்களில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதற்கான ஒரு முன்முயற்சியாக ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.
பல்வேறு உணவுப் பொருட்களில் இருக்கும் கொழுப்புச் சத்து மற்றும் அதிகப்படியான சர்க்கரை ஆகியவை விளைவிக்கும் தீங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பணியிடங்களின் லாபிகள், கேண்டீன்கள், சிற்றுண்டிச்சாலைகள், கூட்ட அறைகள் போன்ற இடங்களில் பலகைகளைக் காட்சிப்படுத்துவது குறித்தே அது அறிவுறுத்தியது.
நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னையை எதிர்க்கும் வகையிலான தினசரி நினைவூட்டல்களாக இந்த பலகைகள் செயல்படும் என்றே கூறப்பட்டது. விற்பனையாளர்களால் விற்கப்படும் உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்கள் இடம்பெறவேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தவில்லை.
மேலும் இந்திய சிற்றுண்டிகளையும், இந்தியாவின் வளமான தெரு உணவு கலாச்சாரத்தையும் குறிவைக்கவில்லை என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது’.