
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கடவுள் தான் தன்னை இப்படிச் செய்ய வைத்ததாகப் பேட்டியளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனது தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்படும் வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களிடம் திங்கள்கிழை காலை கேட்டறிந்து வந்தார். அப்போது வழக்கறிஞர் உடை அணிந்து வந்த ஒருவர் காலணியை எடுத்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயற்சித்தார்.
ஆனால், பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அவரது முயற்சியை முறியடித்தார்கள். பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்திச் சென்றபோது, சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்று அவர் முழக்கமிட்டதாக வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாகச் செய்திகள் வெளியாகின. அவர் பேப்பரை வீச முயன்றதாகவும் கூறப்பட்டன.
இச்சம்பவம் குறித்துப் பேசிய தலைமை நீதிபதி பிஆர் கவாய், "யாரும் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். நாங்கள் கவனத்தைச் சிதறவிடவில்லை. இச்செயல்கள் என்னைப் பாதிக்காது" என்றார். இதன் காரணமாக, நீதிமன்றச் செயல்பாடுகள் சிறிது நேரம் தடைபட்டன.
இதைத் தொடர்ந்து அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் அவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பது தெரியவந்தது. காஜுராஹோ கோயில் குறித்த தலைமை நீதிபதி கவாயின் கருத்து தன்னைக் கோபப்படுத்தியதாக அவர் காவல் துறையினரிடம் கூறியிருக்கிறார். இவர் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பார் கவுன்சில் இவரை இடைநீக்கம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற அலுவலகம் சார்பில் புகார் எதுவும் தரப்படாததால், அவர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றும் கடவுள் தான் இப்படிச் செய்ய வைத்தார் என்றும் ராகேஷ் கிஷோர் பேட்டியளித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது:
"நான் காயப்பட்டுள்ளேன். செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, "உங்களுடைய கடவுளையே சரிசெய்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்" என்று அதை அவர் கேலிக்குள்ளாக்கினார். இதுவே மற்ற மதங்களுக்கு எதிரான வழக்குகளைப் பார்த்தால் தெரியும். ஹல்துவானியில் குறிப்பிட்ட சில வகுப்பினரால் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதை அகற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.
சனாதன தர்மம், ஜல்லிக்கட்டு போன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகள் என்னைக் காயப்படுத்தியுள்ளன. வழக்கில் நிவாரணம் கொடுக்க முடியாவிட்டால், கொடுக்க வேண்டாம். குறைந்தபட்சம் அதைக் கேலி செய்யாமலாவது இருக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி.
நான் வன்முறைக்கு எதிரானவன் தான். ஆனால் எந்தவொரு அமைப்பையும் சேராத, சாதாரண மனிதன் ஒருவன் எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவருடைய வினைக்கு நான் ஆற்றிய எதிர்வினை இது. எனக்குப் பயமோ வருத்தமோ கிடையாது. நான் எதுவும் செய்யவில்லை, கடவுள் தான் என்னைச் செய்ய வைத்தார்.
நான் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன். செப்டம்பர் 16-க்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. 'நாடு பற்றி எரிகிறது, நீ தூங்குகிறாயா?' என்று சில தெய்வச் சக்தி என்னை எழுப்பிக் கேட்டது.
நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. கடவுள் தான் என்னை இப்படி செய்ய வைத்தார். நான் சிறை செல்ல வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் என கடவுள் நினைத்தால், அது அவருடைய விருப்பம்" என்றார் ராகேஷ் கிஷோர்.
முன்னதாக ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த கருத்து பேசுபொருளானது. இதுவே இச்சம்பவத்துக்குக் காரணம் ராகேஷ் கிஷோரும் தற்போது கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தில் ஜவாரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சேதமடைந்துள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மாற்றி புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என ராகுல் தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. அப்போது, இது விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்கு என்று கூறி, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறுகையில், "இது முழுக்க முழுக்க விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு. ஏதாவது செய்யுமாறு கடவுளையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தீவிர விஷ்ணு பக்தர் என்று கருதினால், பிரார்த்தனை செய்து தியானம் மேற்கொள்ளுங்கள்" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது. பிறகு, இதுதொடர்பாக மௌனம் கலைத்த தலைமை நீதிபதி பிஆர் கவாய், "என் கருத்துகள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "தலைமை நீதிபதி பிஆர் கவாயை எனக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தெரியும். எல்லா மதத் தலங்களுக்கும் அவர் சென்றுள்ளார்" என்றார்.
CJI BR Gavai | BR Gavai | Chief Justice of India | Rakesh Kishore |