அரசு முடிவுகளை விமர்சிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

"மற்ற நாடுகளின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து சொல்வதில் எந்தத் தவறும் இல்லை."
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவை விமர்சிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிபவர் காஷ்மீரைச் சேர்ந்த ஜாவெத் அஹமது ஹசம். இவர் கடந்த 2022 ஆகஸ்டில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாட்ஸ்ஆப் குழுவில், ஆகஸ்ட் 5, ஜம்மு-காஷ்மீரின் கருப்பு நாள் என்றும் பாகிஸ்தான் சுதந்திர தினத்துக்கு வாழ்த்துகளையும் தெரித்திருக்கிறார். இதுதொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில் கோலாபூரில் இவருக்கு எதிராக சட்டப்பிரிவு 153-ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு தரப்புக்கு இடையே பிரிவினையை உண்டாக்குவது, சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்படும் பிரிவு இது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர் ஜாவேத் வழக்குத் தொடர்ந்தார். மும்பை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் 10-ல் இவரது மனுவை நிராகரித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இவர் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, விமர்சனத்தைக் குற்றம் என்றால் நாட்டில் ஜனநாயகமே நீடிக்காது என்று தீர்ப்பளித்துள்ளது. அரசினுடைய எந்தவொரு முடிவையும் விமர்சிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றம் ஜாவெத் அஹமதுக்கு எதிரான வழக்குப்பதிவை ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது:

"அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(ஏ) அனைவருக்குமான கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது குறித்தும், அரசின் முடிவு குறித்தும் விமர்சிக்க குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசினுடைய முடிவில் விருப்பமில்லையெனில் அதை வெளிப்படுத்த அவருக்கு உரிமை உள்ளது.

சட்டப்பிரிவை ரத்து செய்த தினத்தை கருப்பு தினம் என்று குறிப்பிடுவது போராட்டத்தின், வேதனையின் வெளிப்பாடு. அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்தையும், விமர்சனத்தையும் சட்டப்பிரிவு 153-ஏ-ன் கீழ் குற்றம் என்று கருதினால், அரசியலமைப்பின் அடிநாதமான ஜனநாயகம் இந்த நாட்டில் தங்காது.

பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆக்ஸ்ட் 14-ல், அந்த நாட்டு மக்களுக்கு இந்தியக் குடிமக்கள் வாழ்த்து சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. இது நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் இது சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கிறது, இரு பிரிவினருக்கிடையே வெறுப்பை உண்டாக்குகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது.

காவல் துறைக்குதான் கருத்து சுதந்திரம் குறித்துப் பாடம் எடுக்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு அளிக்கும் ஜனநாயக மாண்புகள் குறித்த முக்கியத்துவத்தை, புரிதலை அவர்களிடத்தில் உணர்த்த வேண்டும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in