ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 22.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.
90 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஹரியானாவுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
காலை 11 மணி நிலவரப்படி 22.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹரியானாவில் ஆட்சியிலுள்ள பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியைப் பெற முயற்சிக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் - ஷிரோமனி அகாலி தளம், ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் கடும் போட்டியில் உள்ளன.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 464 பேர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள்.
வாக்காளர்களைப் பொருத்தவரை மொத்தம் 2.03 கோடி பேர் உள்ளார்கள். ஒலிம்பிக் நட்சத்திரங்கள் மனு பாக்கர், வினேஷ் போகாட் (காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்) ஆகியோர் வாக்களித்தார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ல் நடைபெறுகிறது.
2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.