
ஹரியாணாவில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நாயப் சிங் சைனி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவிலுள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில், பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நாயப் சிங் சைனி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நர்வானா சட்டப்பேரவை உறுப்பினர் கிரிஷன் குமார் பேடி சைனியின் பெயரை முன்மொழிய அம்பாலா கண்ட் சட்டப்பேரவை உறுப்பினர் அனில் விஜ் வழிமொழிந்தார். மற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் சைனியின் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, சண்டிகரில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவைச் சந்தித்த நாயப் சிங் சைனி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் ஹரியாணா முதல்வராக நாயப் சிங் சைனி நாளை காலை பதவியேற்கிறார்.
கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டர் ராஜினாமாவைத் தொடர்ந்து ஹரியாணா முதல்வராக நாயப் சிங் சைனி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹரியாணாவின் முதல்வராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் நாயப் சிங் சைனி.