
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், வினேஷ் போகாட்டுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று அறிவித்துள்ளார் ஹரியானா முதல்வர் நயப் சைனி.
இது குறித்து தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முதல்வர் நயப் சைனி வெளியிட்டுள்ள அறிக்கை:
`ஹரியானாவின் நம் வீர மகள் வினேஷ் போகாட் அற்புதமாக விளையாடி ஒலிம்பிக்ஸின் இறுதிச் சுற்றுக்குச் சென்றார். சில காரணங்களுக்காக அவரால் ஒலிம்பிக்ஸின் இறுதிச் சுற்றில் விளையாட முடியாமல் போயிருந்தாலும், நம் எல்லோருக்கும் அவர் ஒரு சாம்பியன்.
வினேஷ் போகாட்டை ஒரு வெற்றியாளராக வரவேற்றுக் கௌரவிக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ஹரியானா அரசு வழங்கும் மரியாதை, வெகுமதி, வசதிகள் போன்ற அனைத்தும் வினேஷ் போகாடுக்கு வழங்கப்படும். உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம் வினேஷ்’.
ஒலிம்பிக்ஸின் இறுதிச் சுற்றில் நுழைந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆவார். ஆனால் அவர் போட்டியிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலதாக இருந்த காரணத்தால் வினேஷ் போகாட் நேற்று (ஆகஸ்ட் 7) தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை அடுத்து, தன் தகுதி நீக்கத்தை எதிர்த்து, விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டார் வினேஷ் போகாட். ஆனால் தீர்ப்பாயத்தின் முடிவு வெளியாகும் முன்பே இன்று காலை அவர் தன் ஓய்வை அறிவித்தார்.
வினேஷ் போகாட் ஓய்வை அறிவித்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாகவே, அவருக்குத் தகுந்த மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஹரியானா முதல்வர்.