ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் தேதிகள் மாற்றம்

ஹரியானாவில் வசிக்கும் பிஷ்னோய் குடும்பங்கள், குரு ஜம்பேஷ்வர் திருவிழாவின்போது ராஜஸ்தானில் உள்ள முகம் கிராமத்துக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்
ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் தேதிகள் மாற்றம்
1 min read

ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு தேதியை அக்டோபர் 1-ல் இருந்து அக்டோபர் 5-க்கு மாற்றி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.

கடந்த ஆகஸ்ட் 16-ல், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் தேதிகளை அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ல் எண்ணப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது.

ஆனால், இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட மறு அறிவிப்பில், ஹரியானா சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், பதிவான வாக்குகள் அக்டோபர் 8-ல் எண்ணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியானாவில் வசிக்கும் பிஷ்னோய் சமூக மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடும், 'குரு ஜம்பேஷ்வர் திருவிழா’ அக்டோபர் 2-ல் வருவதால், தேர்தல் வாக்குப்பதிவு தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

ஹரியானாவின் சிர்சா, ஃபதேஹாபாத், ஹிசார் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பிஷ்னோய் குடும்பங்கள், குரு ஜம்பேஷ்வர் திருவிழாவின்போது ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள முகம் கிராமத்துக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே இதனால் பிஷ்னோய் மக்களின் வாக்குரிமை பாதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை மாற்றியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in