
ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
டேராடுனைச் சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர்கள் ஆன்மிக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றதாகத் தெரிகிறது. இதை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காரில் பிரவீன் மிட்டல் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் இருந்திருக்கிறார்கள். பிரவீன் மிட்டல் காருக்கு வெளியே இருந்திருக்கிறார்.
இதைப் பார்த்த அருகிலிருந்தவரிடம் காரில் உள்ள தனது குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தானும் 5 நிமிடங்களில் உயிரிழந்துவிடுவேன் என்று பிரவீன் மிட்டல் சொன்னதாகவும் என்டிடிவியில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரவீன் மிட்டலுக்கு தாய், தந்தை, மனைவி, மகன் மற்றும் மகள்கள் (இரட்டைக் குழந்தைகள்). இவர்கள் அனைவருமே கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட செய்திகள் வருகின்றன.
பஞ்ச்குலா துணை ஆணையர் ஹிமாத்ரி கௌஷிக் இச்சம்பவம் குறித்து கூறுகையில், "ஓஜாஸ் மருத்துவமனைக்கு 6 பேர் கொண்டு செல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர்கள் அனைவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. சிவில் மருத்துவமனைக்கு மற்றொருவர் கொண்டு செல்லப்பட்டார். இவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தற்கொலை என்பது சில தகவல்கள் மூலம் தெரிகிறது. இதுதொடர்பாக அறிவியல்பூர்வ ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம்" என்றார்.
பிரவீன் மிட்டலுக்கு ரூ. 20 கோடி வரை கடன் இருப்பதாகச் செய்திகளில் கூறப்படுகின்றன.
(*தற்கொலை எதற்கும் தீர்வல்ல)