தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
ANI

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.
Published on

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக, அதிமுக தலைவர்கள் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஏப்.12) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில், அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.

மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. இதை நமது கூட்டணி செய்து முடிக்கும்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in