அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை: டிரம்பிடம் மோடி திட்டவட்டம்!

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக டிரம்ப் கூறி வந்தார்.
அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை: டிரம்பிடம் மோடி திட்டவட்டம்!
ANI
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, ​​கடந்த மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தில் அமெரிக்காவிற்கு எந்தவித பங்கும் இல்லை என்றும், அந்த நேரத்தில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

டிரம்ப் விடுத்த கோரிக்கையின்படி இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற 35 நிமிட பேச்சுவார்த்தை குறித்து விளக்கிய மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி,

`இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் நிகழ்வுகளின்போது, எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு மட்டத்திலும், அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி டிரம்பிடம் தெளிவாக எடுத்துரைத்தார்’ என்றார்.

மேலும், `இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே நிறுவப்பட்டுள்ள அமைப்புகளின் வழியாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடியாக நடைபெற்றதாக பிரதமர் கூறினார். இது பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் மேற்கொள்ளப்பட்டது’ என்றார் மிஸ்ரி.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மே 7-ல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கிய பிறகு, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் முதல்முறையாக தற்போது உரையாடியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், டிரம்ப் இடையேயான சந்திப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. இதனாலேயே இது முக்கியத்துவம் பெறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்காக மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாகவும், வர்த்தகத்தை நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தி இரு நாடுகளுக்கிடையே உள்ள மோதல் போக்கை நிறுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் பலமுறை டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், டிரம்பின் இந்த கூற்றுகளை தொடர்ச்சியாகவே இந்தியா நிராகரித்து வந்துள்ளது. மேலும், போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையின்பேரில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இந்தியா கூறிவந்தது.

டிரம்பிற்கும், மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இஸ்ரேல்-ஈரான் தாக்குதலை முன்னிட்டு, உச்ச மாநாட்டில் இருந்து பாதிலேயே டிரம்ப் வெளியேறியதால், நேரடி பேச்சுவார்த்தைக்கு பதிலாக தொலைபேசி வழியாக இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in