26-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் கியானேஷ் குமார்

கடந்த ஓராண்டு காலமாக தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.
26-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் கியானேஷ் குமார்
1 min read

26-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தில்லியில் இன்று (பிப்.19) பொறுப்பேற்றுக் கொண்டார் கியானேஷ் குமார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்று (பிப்.18) பணி ஓய்வு பெற்றார். புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்தெடுக்கும் வகையில், நேற்று முந்தைய தினம் (பிப்.17) பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை உறுப்பினர்களாக் கொண்ட தேர்வுக் குழு தில்லியில் கூடியது.

இந்த கூட்டத்தின்போது, ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தாலும் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு கியானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், தேர்தல் ஆணையர் பதவிக்கு ஹரியாணா மாநில தலைமைச் செயலாளர் விவேக் ஜோஷி தேர்வு செய்யப்பட்டார்.

1964-ல் உ.பி. மாநிலம் கான்பூரில் பிறந்த கியானேஷ் குமார், கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். 1988-ல் ஐஏஎஸ் பணிக்கு கேரள பேட்ச்சில் தேர்வு செய்யப்பட்ட கியானேஷ் குமார், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் பணிபுரிந்திருக்கிறார். கடைசியாக 14 மார்ச் 2024-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட கியானேஷ் குமார், ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் அப்பதவியில் இருந்தார்.

இந்நிலையில், தேர்வுக்குழு முடிவின் படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இன்று (பிப்.19) காலை 26-வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் கியானேஷ் குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in