இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் ஞானேஷ் நியமனத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும், கூட்டம் நிறைவடைந்து சில மணி நேரங்களிலேயே புதிய தேர்தல் ஆணையராக ஞானேஷ் நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
ஞானேஷ் குமார் 1988-ம் ஆண்டு பிரிவு கேரளத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர் ஞானேஷ் குமார். இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறைச் செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் மற்றும் கூடுதல் செயலராக இருந்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான மசோதாவைத் தயாரிக்க உதவியிருக்கிறார்.
இவர் ஜனவரி 26, 2029 வரை தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகிக்கவுள்ளார். மொத்தம் 20 சட்டப்பேரவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலுக்கானத் தயார் நிலைகள் உள்ளிட்டவற்றில் தலைமைத் தேர்தல் ஆணையராகச் செயல்படவுள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல், மேற்கு வங்கம், கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் இவருடைய முதல் பெரிய சவாலாக இருக்கும்.
ஞானேஷ் குமார் நியமனத்தைத் தொடர்ந்து, விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் 1989-ம் ஆண்டு ஹரியாணா பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி.