குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து 9 பேர் பலி: அந்தரத்தில் டேங்கர் லாரி

ஆற்றுப் பாலம் 1985-ல் கட்டப்பட்டது, தேவைக்கேற்ப அதில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இடிந்து விழுந்த ஆற்றுப் பாலம்.
இடிந்து விழுந்த ஆற்றுப் பாலம்.
1 min read

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆறு மீது அமைந்துள்ள கம்பீரா பாலம் இன்று (ஜூலை 9) காலை இடிந்து விழுந்ததில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ள நிலையில், டேங்கர் லாரி ஒன்று பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

குஜராத் மாநிலத்தில், மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளை இணைக்கும், காம்பிரா பாலம் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் ஒரு பகுதி எதிர்பாராவிதமாக திடீரென இன்று (ஜூலை 9) காலை இடிந்து விழுந்ததில், அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த ஐந்து முதல் ஆறு வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் விழுந்தன. இந்த தகவலை குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்ததாக எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆற்றுப் பாலம் 1985-ல் கட்டப்பட்டது என்றும், தேவைக்கேற்ப அதில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அவர் கூறினார். மேலும், `(இந்த) சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சரியான காரணம் குறித்து விசாரிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக காலை 11.30 மணியளவில் வதோதரா கலெக்டர் அனில் தமேலியா கூறுகையில்,

`இன்று காலை மீட்புப் பணிகள் தொடங்கின. உள்ளூர் நீச்சல் வீரர்கள், படகுகள் மற்றும் மாநகராட்சி குழுவினர் உடனடியாக சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர். வி.எம்.சி, அவசரகால மீட்பு மையம், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் பிற நிர்வாகம், காவல்துறை குழு ஆகியவை இங்கு உள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 9 உடல்களை மீட்டுள்ளோம். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர், காயமடைந்த 6-வது நபர் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டார், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

பாலம் இடிந்த விழுந்ததைத் தொடர்ந்து, சேதமடைந்த பாலத்தின் மீது ஒரு டேங்கர் லாரி சிக்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in