குஜராத்தில் புதிய சட்டம்: காதல் திருமணங்களைப் பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் அவசியம் | Gujarat |

இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதால் இது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதாக விமர்சனம்...
குஜராத்தில் புதிய சட்டம்: காதல் திருமணங்களைப் பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் அவசியம்
குஜராத்தில் புதிய சட்டம்: காதல் திருமணங்களைப் பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் அவசியம்
2 min read

குஜராத்தில் காதல் திருமணங்களின் பதிவிற்கு இனி பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்று சட்டம் இயற்றவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசு, 'குஜராத் திருமணங்கள் பதிவுச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்வதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பெண்களுக்கு எதிராக மோசடி

இது தொடர்பாகஅவர் கூறியதாவது:-

“லவ் ஜிஹாத் என்ற பெயரில் மாநிலத்தில் பெண்களை ஏமாற்றி சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பது பரவி வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர வலுவான தடுப்பு ஒன்று தேவை. பல நேரங்களில் இளம் பெண்கள் ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றப்பட்டு, பெற்றோரின் சம்மதமின்றித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக 'லவ் ஜிஹாத்' போன்ற திட்டமிட்ட மதமாற்றத் திருமணங்களைத் தடுக்க இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன. பெற்றோரின் சம்மதம் இருக்கும்போது, அத்தகைய திருமணங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கும்” என்று பேசினார்.

தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது

குஜராத் அரசின் இந்த முடிவிற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 18 வயது நிறைவடைந்த பெண்ணும், 21 வயது நிறைந்த ஆணும் தங்கள் விருப்பப்படி துணைவரைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை உண்டு. இதில் பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்குவது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதால் இது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதாகவும் சட்டத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய நிபந்தனைகள் என்ன?

குஜராத் அரசு முன்மொழிந்துள்ள இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, திருமணத்தைப் பதிவு செய்யும் முறையில் பல புதிய மற்றும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.

  • திருமணப் பதிவுக்கான விண்ணப்பத்தில் மணமகன், மணமகள் மற்றும் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். இந்த விண்ணப்பம் முறையாக நோட்டரி மூலம் சான்றொப்பம் பெறப்பட வேண்டும். அத்துடன் மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இணைப்பது கட்டாயமாகும்.

  • திருமண விண்ணப்பத்துடன் மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், தலா இரண்டு ஒளிப்படங்கள், திருமணத்தின்போது எடுத்த படம் மற்றும் சாட்சிகளின் படங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மணமக்கள் தங்கள் திருமணத்தைப் பற்றிப் பெற்றோருக்குத் தெரிவித்துவிட்டார்களா என்பது குறித்த உறுதிமொழிக் கடிதத்தையும் வழங்க வேண்டும். இதே போன்ற ஆவணங்கள் இருதரப்பு பெற்றோரிடமிருந்தும் கோரப்படும்.

  • விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட உதவிப் பதிவாளர், அதில் திருப்தி அடையும் பட்சத்தில், 10 வேலை நாட்களுக்குள் மணமக்களின் பெற்றோருக்கு மின்னணு முறையிலோ அல்லது நேரடியாகவோ இது குறித்துத் தகவல் தெரிவிப்பார்.

  • உதவிப் பதிவாளர் இந்த விண்ணப்பத்தைத் தாலுகா அல்லது மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். சட்ட விதிகளின்படி அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதைப் பதிவாளர் உறுதி செய்த 30 நாட்களுக்குப் பிறகே அந்தத் திருமணம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும்.

  • திருமணத்தின் அனைத்து விவரங்களையும் அரசு உருவாக்கவுள்ள பிரத்யேக இணையதளத்தில் பதிவாளர் பதிவேற்றம் செய்ய வேண்டும். நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு, முறைப்படி திருமணப் பதிவுச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Stating that “under the name of love jihad, a game is being played in the state” and “a strong armour… needs to be created for young girls”, the Gujarat government Friday proposed amendments to the Gujarat Registration of Marriages Act, 2006, including a provision that makes consent of parents compulsory for registration of a marriage.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in