குஜராத் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேரில் பார்வையிடும் குஜராத் முதல்வர்
நேரில் பார்வையிடும் குஜராத் முதல்வர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் விளையாட்டு மையம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சம்பவ இடத்துக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டார்கள். இதைத் தொடர்ந்து, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மருத்துவமனை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து உள்துறை அமைச்சர் கூறுகையில், "விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட 7-வது நிமிடத்தில் முதல் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அந்த நேரத்தில் தீ முற்றிலுமாகப் பரவிவிட்டது. இதில், 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த விபத்தில் ஒருவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார். அவரைக் கண்டறிவதற்கானப் பணியை மேற்கொண்டு வருகிறோம். விசாரணையைத் தொடங்குமாறு சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அதிகாலை 3 மணிக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து விதமான விசாரணையும் இன்றே தொடங்கும்" என்றார்.

ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் பிரப் ஜோஷி கூறுகையில், "சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகியுள்ளன. அடையாளம் காண்பதற்காக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்த 27 பேரில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்" என்றார்.

விளையாட்டு மையத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர யாதவ் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in