
தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக இதுவரை 3981 அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியில் சமீபத்தில் சீர்திருத்தம் செய்து ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், 4 அடுக்குகளாக இருந்த வரிகள் 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. மேலும், பல முக்கிய பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலுமாக நீக்கப்பட்டது. இந்தச் சீர்திருத்தம் கடந்த செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க வசதியாக தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் எண்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், புதிய ஜிஎஸ்டி வரிகள் அமலுக்கு வந்து 10 நாள்களில் தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு 3981 அழைப்புகள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலாக்கப்பட்ட நிலையில், 3981 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 31% அழைப்புகளில் புதிய சீர்திருத்தம் குறித்த சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. 69% அழைப்புகளில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த புகார்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நுகர்வோர் விவகாரத் துறை இவற்றைக் கவனமாகக் கண்காணித்து வருகின்றன. மேலும், புகார்கள் குறித்து விரிவான தகவல்களைச் சேகரித்து, அவற்றை விரைந்து சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 1992 புகார்கள் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகப்படியான புகார்கள் பால் விலை தொடர்பாகவே இருந்தன. புகார் தெரிவித்தோரில் பலர் பால் உற்பத்தி நிறுவனங்கள் பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தின் அடிப்படையிலேயே விலையைத் தொடர்ந்து வருவதாகவும், இதனால் புதிய சீர்திருத்தத்தின் பயன்களை முழுவதுமாக அடைய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். ஏற்கெனவே புதிய பாலுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிக வெப்பத்தில் பதப்படுத்தப்பட்ட பாலுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டதாக உதவி மையம் விளக்கம் அளித்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மின்சாதன பொருட்களின் மீதான வரி விகிதக் குறைப்பு குறித்தும் அதிக புகார்கள் எழுந்தன. மடிக்கணினி, குளிர்சாதனப் பொருள்கள், சலவை இயந்திரம் போன்றவற்றுக்கும் பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தின் படியே விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் கூறினர். இந்த விவகாரத்திலும் ஏற்கெனவே 18% ஜிஎஸ்டி இருந்த பொருள்கள் அதே விகிதத்தில் தொடர்வதாகவும், புதிதாக 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி, கணினித் திரைகள், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவையின் பட்டியல் குறிப்பிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோ உள்ளிட்ட அத்யாவசிய பொருள்களின் மீதான வரி குறைக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டியும் புகார்கள் எழுந்தன. ஆனால் ஏற்கெனவே இவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 5% என்ற அளவிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது சுட்டிக் காட்டப்பட்டது.
இதன்மூலம் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை குறித்து நாட்டு மக்களின் உண்மையான சவால்களை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உறுதியாக இருக்கிறது என்பதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.