ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம் 140 கோடி மக்களின் வரிச்சுமையைக் குறைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது : ஜிஎஸ்டி தொடங்கப்பட்டபோது 4 வகைகளாக இருந்த வரிகள் இப்போது 5 மற்றும் 18% என இரண்டு வகைகளாக மட்டுமே இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம், நாட்டின் 140 கோடி மக்கள் மீது நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னர் 12, 18% ஆக இருந்த பல பொருட்களின் வரி இப்போது 5% ஆக குறைந்திருக்கிறது. 5% ஆக வரி இருந்த பொருள்களின் வரி 0% ஆகியிருக்கிறது.
இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தீபாவளிக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்று சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், நவராத்திரி பண்டிகைக்கு முன்பாகவே ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் பண்டிகைகளையும் மனதில் வைத்துக் கொண்டு முன்கூட்டியே ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை அறிவித்துவிட்டோம். இதை அனைத்து மாநில நிதியமைச்சர்களும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்த முடிவு. ஜிஎஸ்டி மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்து உள்ளது. ஜிஎஸ்டி அமலான போது வரி செலுத்துவோர் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் 1.50 கோடியாக உயர்ந்துள்ளது.
8 மாதங்களாக எல்லா பொருட்களையும் ஆய்வு செய்து வரியை மாற்றி அமைத்தோம். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக இருக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால் செலவு குறைந்து சேமிப்பு அதிகமாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Nirmala Sitharaman | GST | GST Council |