
கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் நடைபெற்று வருகிறது. மாநில நிதியமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலிருந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் இதில் கலந்துகொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் 148 பொருள்களுக்கான வரி விதிப்பு மாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் 5%, 12%, 18%, 28% என தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி முறை தவிர்த்து, புதிதாக 35% என புதிதாக ஜிஎஸ்டி முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கார்னுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பேக் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பாப்கார்னின் இயல்புத் தன்மைக்கு மாறாக சர்க்கரை சேர்க்கப்படுவதால், பாப்கார்னின் இயல்பு மாறுகிறது. எனவே, கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது.