தில்லியில் நேற்று (செப்.10) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54-வது கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு:
3 புற்றுநோய் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். மேலும் நாம்கின்கள் என்று அழைக்கப்படும் திண்பண்டங்கள் மீது இதுவரை விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரி, 12 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆன்மிகப் பயணங்களுக்கான ஹெலிகாப்டர் சேவைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கார் சீட் கவர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரி, 28 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களின் சீட் கவர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உள்ளது.
இந்த கூட்டத்தில் கேசினோ, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி தொடரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 0%, 5%, 12%, 18%, 28% என ஐந்து விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விதிகங்களைச் சீரமைப்பது தொடர்பாக செப்.23-ல் மாநில நிதி அமைச்சர்களைக் கொண்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
வாகனங்கள், புகையிலை போன்ற தேர்தெடுக்கப்பட்ட சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர்பான முடிவை எடுக்க புதிய அமைச்சரவைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆயுள், மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி தற்போது விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விகிதத்தைக் குறைக்க இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வரி விகிதத்தைக் குறைப்பது தொடர்பான பரிந்துரையை அளிக்க புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
50 நாட்களுக்குள் அமைச்சரவைக் குழு பரிந்துரையை அளிக்க இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அமைச்சரவைக் குழு பரிந்துரை தொடர்பாக நவம்பர் மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் டெபிட், கிரெடிட் கார்டுகளை உபயோகித்து மேற்கொள்ளப்படும் ரூ. 2000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.