நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ல் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தகவல்.
நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
ANI
1 min read

கடந்த மே 5-ல் நடந்த மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 4-ல் வெளியானது. எப்போதும் இல்லாத விதமாக இந்த முறை நீட் தேர்வில் 67 தேர்வர்கள் முதலிடம் பிடித்தனர். இந்த 67 தேர்வர்களில் 6 தேர்வர்கள் ஹரியானா மாநிலத்தின் ஒரே மையத்தில் தேர்வெழுதிய தகவல் வெளியாகி சர்ச்சை கிளம்பியது.

மேலும் `சில தேர்வு மையங்களில் தேர்வெழுதும் நேரம் குறைவாக வழங்கப்பட்டதால் சுமார் 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக’ இந்த நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. தேர்வாணையத்தின் விளக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

`நேரமின்மையால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பாதிக்கப்பட்டபோது, எந்த அடிப்படையில் 1563 தேர்வர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது’ என்ற கேள்வியுடன், தேர்வுக்கு முன்பு தேர்வின் வினாத்தாள் கசிந்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது

வழக்கை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், ஜூன் 11-ல் மனுதாரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அளித்தது. அதே நேரம் நீட் தேர்வு முடிவுகளின்படி கவுன்சிலிங் நடத்தத் தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23-ல் மறுதேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், `கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்பட்டு 1,563 மாணவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் வெளியிடப்படும். இந்த மறுதேர்வில் பங்கேற்கவிரும்பாத மாணவர்களுக்கு பழைய அசல் மதிப்பெண்கள் தொடரும்’ எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

`கருணை மதிப்பெண்கள் தவிர்த்து, தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததாக மனுதாரர் அளித்துள்ள குற்றச்சாட்டுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என ஜூன் 8-ல் மத்திய கல்வித்துறை செயலர் அறிவித்தார்.

இந்த வருடம் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அதை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in