78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. அவரது உரை பின்வருமாறு:
`என் அன்பார்ந்த சக குடிமக்களாகிய உங்களுக்கு என் மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 2021 முதல் 2024 வரை, ஆண்டுதோறும் சராசரியாக 8 சதவீத வளர்ச்சியுடன், உலகளவில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இதனால் மக்களின் கைகளில் அதிக பணம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைத்துள்ளது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.
சமூக நீதிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகத்தின் பிற விளிம்புநிலை மக்களின் நலனுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பல முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. பெண்கள் நலனுக்கும், பெண்கள் அதிகாரமளிப்புக்குமான முக்கியத்துவத்தை அரசு அளித்துள்ளது.
இளைஞர்களின் திறமையைப் பயன்படுத்த, அவர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், விண்வெளி ஆய்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது’.