
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி 24 மணி நேரத்தில் அரசிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது, 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 27-ல் நடைபெற்றது. இதன்பிறகு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசியலமைப்புச் சட்டம் 200-ன் படி மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் அதை நிறுத்தி வைக்க முடியாது என்றும் இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், 24 மணி நேரத்தில் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும், ஆளுநர் எதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என்பதை மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை பிப்ரவரி 6-க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஆளுநர் மற்றும் அரசு இடையிலான மோதலால் மக்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.