
மஹாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளதாக தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 132 இடங்கள், சிவசேனை 57 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்கள் என கூட்டணியாக மொத்தம் 288 இடங்களில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. இதுதவிர 7 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்கவுள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பாஜக மேலிடக் கண்காணிப்பாளர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி ஆகியோர் உடனிருந்தார்கள்.
"ஆளுநரைச் சந்தித்து மஹாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினோம். மெகா கூட்டணியின் முதல்வராக நான் பதவியேற்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகளான சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தன. அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாளை மாலை 5.30 மணிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்" என்று செய்தியாளர்களிடம் கூறினார் தேவேந்திர ஃபட்னவீஸ்.
அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.