ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை: தமிழக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை: தமிழக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
1 min read

மாநில ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உட்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, பி. வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

வழக்கின் இறுதி விசாரணை கடந்த பிப்.10 அன்று நடைபெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 8) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியதாவது,

1) ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை.

2) தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது.

3) மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.

4) 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கவேண்டும். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.

5) மசோதாக்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்.

6) இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ், குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்குகிறோம்.

7) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் மதிப்பளிக்கவேண்டும்.

8) பொதுவான விதிகளின்படி, மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படியே ஆளுநர் செயல்பட முடியும்.

9) சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக, மசோதா நிறைவேற்றப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் ஆளுநர்கள் முடிவு செய்யவேண்டும்.

10) சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் ஆளுநர்கள் முடிவு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in