அம்ருத்சர் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதலா?: மத்திய அரசு விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு, உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை கையிருப்பு வைத்திருக்கும்படி தகவல் வெளியானது.
அம்ருத்சர் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதலா?: மத்திய அரசு விளக்கம்
ANI
1 min read

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்த பிறகு, பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் மற்றும் அரசு சார்ந்த சமூக வலைதளக் கணக்குகளில் பதிலடி தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகின.

இவற்றின்படி, இந்தியா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக பஞ்சாப் மாநிலம் அம்ருத்சரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த செய்திகள் அனைத்தும் போலி என்று மத்திய அரசின் பிஐபி (PIB) தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தானால் அம்ருத்சரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டு, போலியான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சிகள் 2024-ல் ஏற்பட்ட காட்டுத்தீ சமயத்தில் எடுக்கப்பட்டவை என்று பிஐபி தகவல் சரிபார்ப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இதை முன்வைத்து, `உறுதிபடுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்து, துல்லியமான தகவல்களுக்காக இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்குகளை பார்க்குமாறு’ பிஐபியின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய குடிமக்களுக்கான அறிவுறுத்தல் என்ற பெயரில், மத்திய அரசு கூறியதாக ஒரு போலியான தகவல் நேற்று (மே 7) சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

அதில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு, எளிதில் கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை கையிருப்பு வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவுறுத்தலும் போலியானது என்று மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in