`இந்தியாவில் உள்ள சில ஆளுநர்கள் அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறார்கள், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்கிறார்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா
தங்கள் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளை எதிர்த்து தமிழக அரசும், கேரள அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஆளுநர்கள் குறித்த நீதிபதி நாகரத்னாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற நீதிபதி நாகரத்னா, `இன்றைய காலகட்டத்தில் துரதிஷ்டவசமாக சில ஆளுநர்கள் அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறார்கள், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்குகள், ஆளுநர்களின் நிலையை உணர்த்தும் ஒரு சோகக்கதையாகும்’ என்றார்.
மேலும், `ஆளுநர்கள் சில பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு இருக்கிறது. அளுநர் பதவியை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்ததற்கான முக்கிய நோக்கம் நல்லிணக்கம் தவழ வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு ஆளுநர் தனது கடமைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டால் முரண்பட்டுள்ள மக்களுக்கிடையே நல்லிணக்கம் நிலவும். கட்சிகள் மேற்கொள்ளும் அரசியலில் சிக்காத நபராக ஆளுநர்கள் இருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்’ என்று கருத்தரங்கில் பேசினார் நாகரத்னா.
மைசூரு நகர வளர்ச்சி அமைப்பை முன் வைத்து கடந்த சில நாட்களாக காங்கிரஸின் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசுக்கும், கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட்டுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.