

கோவா இரவு விடுதி தீ விபத்து தொடர்பாக விடுதியின் உரிமையாளர்கள் சௌரப் மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இருவரது கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து காவல் துறையினருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தில்லியைச் சேர்ந்த லுத்ராஸ் சகோதரர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரோமியோ லேன் விடுதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 4 நாடுகளில் 22 நகரங்களில் இவர்களுடைய உணவு விடுதி நிறுவனம் இயங்கி வருகிறது. கோவாவில் அர்போரா கிராமத்தில் இவர்களுடைய இரவு விடுதி செயல்பட்டு வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு கோவாவிலுள்ள இவர்களது இரவு உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுலாவுக்கு வந்த 5 பேர் மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 20 பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தார்கள்.
தீ விபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான எந்தவொரு நடைமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தீயை அணைப்பதற்குத் தேவையான சாதனங்கள் இல்லை, எச்சரிக்கை ஒலி இல்லை என்று கூறப்படுகின்றன. மேலும், குறுகிய சாலை என்பதால் தீயணைப்பு வாகனங்கள் அங்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
தீயை அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள் 25 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்தார்.
விபத்து தொடர்பாக ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். உரிமையாளர்களான லுத்ராஸ் சகோதரர்களைத் தேடும் பணியில் கோவா காவல் துறையினர் இறங்கினார்கள். இவர்களுடைய தொழில் கூட்டாளியான அஜய் குப்தா தில்லியில் கைது செய்யப்பட்டார்.
ஆனால், விபத்து நேர்ந்ததைத் தொடர்ந்து, லுத்ராஸ் சகோதரர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்கள். தில்லி உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். தொழில் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே தாய்லாந்து சென்றதாக அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடக்கும்போது சம்பவ இடத்தில் தாங்கள் இல்லை என்றும் விடுதி செயல்பட்டு வரும் கட்டடம் தங்களுக்குச் சொந்தமானது இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில் தான் லுத்ரா சகோதரர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடவுச்சீட்டுடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் தாய்லாந்து காவலர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர்களை இந்தியா அழைத்து வருவதற்காக இந்திய அதிகாரிகள் அடுத்த 24 மணி நேரத்தில் தாய்லாந்து செல்லவுள்ளார்கள். இந்தியாவுக்கு அழைத்து வந்தவுடன் இவர்களிடம் கோவா காவல் துறையினர் விசாரணை நடத்துவார்கள்.
Goa Night Club | Goa | Goa Fire | Goa Night Club Fire | Luthra Brothers | Saurabh Luthra | Gaurav Luthra | Thailand |