அரசியலில் உத்தரவாதம் அளிப்பது சட்டவிரோதம்: கபில் சிபல்

"தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."
கபில் சிபல் (கோப்புப்படம்)
கபில் சிபல் (கோப்புப்படம்)

அரசியலில் உத்தரவாதம் அளிப்பது சட்டவிரோதம் என மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதிகளை மோடி அளிக்கும் உத்தரவாதம் என்று வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், உத்தரவாதம் அளிப்பது சட்டவிரோதம் என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"அரசியலில் உத்தரவாதம் அளிப்பது சட்டவிரோதம். தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் (மோடி) எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும்? நான் முயற்சிப்பேன் என்று சொல்லலாம், ஆனால் உத்தரவாதம் அளிக்க முடியாது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நாட்டைக் குறித்து மட்டுமே சிந்திக்கிறேன், அரசியலில் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த முடிவு வெளியானதிலிருந்து மோகன் பாகவத் வாயைத் திறக்கவே இல்லை. மோடி அரசின் முடிவு தவறானது என்று அவர் கூற வேண்டும்.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக மற்றும் மற்ற கட்சிகள் பெற்றுள்ள பணம் சட்டத்துக்குப் புறம்பானது என்பதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பணம் சட்டவிரோதமான பணம் என்றால், வருமான வரித் துறையிடமிருந்து பாஜகவுக்கு ஏதாவது நோட்டீஸ் வந்துள்ளதா? அமலாக்கத் துறை சோதனைகள் ஏதும் மேற்கொண்டுள்ளதா? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் (பாஜக) ரூ. 6,655 கோடியை நிதியாகப் பெற்றுள்ளீர்கள், உங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதா?" என்றார் கபில் சிபல்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in